முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 2 - ஜகமோஹனம் - 1 கிழக்கு, தெற்குப் பகுதிகள்

ஜகமோஹனம்


இந்தக் கோயிலின் ஜகமோஹனம் தொடக்கக் கால கலிங்கக் கட்டடக் கலைப்படி உட்புறத் தூண்களால் தாங்கப்படும் தட்டையான கூரையுடன் அமைந்தது. வரிசைக்கு மூன்றாக இரு வரிசை வேலைப்பாடற்ற சதுர வடிவத் தூண்கள். பிற்காலத்தில் ஜகமோஹனங்களின் கூரைகள் பிரமிட் வடிவ பிடா வகையில் அமையத் தொடங்கின.
ஜகமோஹனம் மூன்று பக்கங்களில் வாயில்களைக் கொண்டுள்ளது. கிழக்கில் முதன்மை வாயில். தெற்கில் ஒரு வாயில். மேற்கு வாயில் கருவறையின் வாயிலாக உள்ளது.
இந்த ஜகமோஹனத்தின் சிறப்புக் கூறு அதன் நான்கு மூலைகளாக அமைந்து  இருக்கும் சிறு விமான அமைப்புகள். புவனேசுவரத்தில் உள்ள பைதால தேவுலத்திலும் இது போன்ற அமைப்பு உள்ளது. இவை கருவறைகள் இல்லாத அலங்கார விமான அமைப்புகள். மூன்று ரத மூன்று பூமி விமானங்கள், மூன்று உறுப்புகளைக் கொண்ட அதிட்டானம். பிரிக்கப்படாத ஜாங்கத்தில் மூன்று ரதங்களில் மூன்று தேவகோட்டங்கள்.
(படம் நன்றி: ASI Instagram page)

கிழக்கு வாயில்

முதன்மையான கிழக்கு வாயிலும் இரு மூலை விமான அமைப்புகளும்
(படம் நன்றி:  ASI Instagram page)

கிழக்கு முதன்மை வாயில். இதை இந்தியக் கோயில் வாயில்களில் மிகவும் அழகானது என்று டக்லஸ் பேரெட் தனது முகலிங்கம் நூலில் கூறுகிறார்
(படம் நன்றி: G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons)

தெற்கு வாயிற்காவலர்
திரிபங்க நிலை, சுருள் முடி. ஜடாமகுடம். அதன் முன் பகுதியில் கபாலமும் பிறைச் சந்திரனும்.பின்னால் தலையைச் சுற்றி ஒளிவட்டம். இங்கு தெய்வங்களுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் பின்னால் ஒளிவட்டம் உள்ளது. கழுத்தின் வலப்புறம் நாகப் படம். வலது பின் கையில் அக்கமாலை. முன் கை சூசி ஹஸ்தமாக கீழ்நோக்கி எதையோ சுட்டுகிறது. இடது பின் கையில் பூங்கொத்து. முன் கை சூலத்தைப் பிடித்திருக்கிறது. அதே சூலத்தைப் பிடித்தவாறு இடது கால் அருகில் ஒரு பூதகணம் நிற்கிறது. வலது கால் அருகில் இன்னொரு பூதகணம் உட்கார்ந்திருக்கிறது. முத்துகள் கோர்த்த அணிகலன்கள். மூவருக்கும் சுருள் முடி.

வடக்கு வாயிற்காவலர்
தெற்கரில் இருந்து சில வேறுபாடுகள் உள்ளன. தலை ஒரு பக்கமாகச் சாயாமல் நேராக உள்ளது. சுருள் முடிக்கு பதிலாக நேர்முடி ஜடாபந்தமாக உள்ளது. அதில் கபாலமோ பிறைச் சந்திரனோ இல்லை. வலது முன் கையில் ஒரு உருண்டையான பழம். இடது முன் கை கடி ஹஸ்தமாக இடுப்பின் மேல் உள்ளது. சூலம் மனித உருவமாக இடது கால் பக்கத்தில் நிற்கிறது. வலது கால் பக்கம் இன்னொரு பூத கணம் நிற்கிறது. தலையைச் சுற்றி உள்ள ஒளிவட்டத்தின் ஓரத்தையும் முத்துச் சரத்தால் அலங்கரித்திருப்பது தனி சிறப்பு.

கிழக்கு வாயிலின் மேற்புறம்
இருபுறமும் நாகதேவனின் கையில் இருக்கும் குட நீர்வழி.

கிழக்கு வாயிலின் மேற் பகுதி
மக்கள் வாழ்க்கைக் காட்சிகள், போர் காட்சிகள் யானைப் படை

கிழக்கு வாயிலின் தெற்குப் பகுதி 
நடுவில் வாயிலின் வெளித் தூண் - கீழே கடபல்லவம், அதன் மேல் கோட்ட அமைப்பில் வாயிற் காவலர்
வலது புறம் - வாயில் முன்புறம் - கீழே சுரசுந்தரி. மேலே இணையர்கள்.
இடது புறச் சுவரில் ஆமை மீது யமுனை

கிழக்கு வாயிலின் வடக்கில் மகரம் மீது கங்கை. 
இடது பக்கம் ஒரு பணிப்பெண் குடை பிடித்து இருக்கிறாள். குடையின் மேல் பாகம் சிதைந்துள்ளது. கங்கை தன் இடது கையை அந்தப் பணிப்பெண்ணின் தோளின் மீது வைத்திருக்கிறாள். அவள் வலது கையில் ஒரு மலர்ந்த தாமரை. கங்கையின் கொண்டை அலங்காரமும் தலை அணிகலன்களும் சிறப்பாக உள்ளன. கொண்டையிலும் தலை மீதும் தலைமுடி நுட்பமாக காட்டப்பட்டுள்ளது. கங்கை வீரச் சங்கிலி அணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கணுக்கால் வரையான பருத்தி ஆடை. கங்கையின் வலது கால் பக்கத்தில் காகபக்ஷ தலைமுடி அலங்காரத்துடன் வலது கையில் மலர் கொத்து ஒன்றை ஏந்தி நிற்கும் ஒரு சிறுவன் (காகபக்ஷம் = தோள்பட்டை நீளமுள்ள முடி மூன்றாகப் பிரிக்கப்பட்டு, மையப் பகுதி கொண்டையாக முடியப்பட்டு, இரு பக்கவாட்டு பாகங்கள் இரு புறமும் தொங்கிக் கொண்டிருப்பது).மேலே வலது பக்கம் முத்து மாலையுடன் பறந்து வரும் ஒரு வித்யாதரன்.

கிழக்கு வாயிலின் தெற்கில் ஆமை மீது யமுனை.
கங்கைச் சிற்பம் போன்றது. சில வேறுபாடுகள் உள்ளன. யமுனை ஸ்வஸ்திகாசனத்தில் நிற்கிறாள். வலது கை ஒரு மலருடன் உடலின் குறுக்காக உள்ளது. இடது கை தொடை மீது. பருத்தி ஆடைக்குப் பதிலாக பட்டாடை. குடையின் மேற்பகுதி முழுமையாக உள்ளது. சிறுவனுக்கு காக பக்ஷத்திற்கு பதில் சுருள் முடி ஜடாபாரம். வித்யாதரனுக்கு பதிலாக அன்னம் முத்து மாலையைச் சுமந்து வருகிறது.

தென்கிழக்கு மூலை விமான அமைப்பின் ஜங்கா (சுவர்) சிற்பங்கள்



கிழக்குச் சுவர் வடக்கு முண்டி (தேவகோட்டம்) - சூரியன்
நடு ரதம் வெறுமையாய் உள்ளது

தெற்குச் சுவர் கிழக்கு முண்டி- இணையர்  (மிதுன)

தெற்குச் சுவர் நடு முண்டி - இணையர் (மிதுன)

தெற்குச் சுவர் மேற்கு முண்டி
சூலத்துடன் ஒரு பூதகணம்

தென்கிழக்கு விமானத்திற்கும் தெற்கு வாயிலுக்கும் இடைப்பட்ட ஜங்கா (சுவர்) சிற்பங்கள்


கிழக்கில் இருந்து மேற்காக

1. கார்த்திகேயன்
சிதைந்த முகம், இரு கைகள், இடது கை ஆடையைப் பிடித்திருக்க வலது கையில் பாத்திரம் ஒன்று. உதரபந்தம், தொடை வரையான மரவுரி ஆடை.
பின்னால் மயில். அவரது இடது பக்கம் மேல் மூலையில் ஒரு துறவி மண்டியிட்டு வணங்குகிறார்.
அவரது இடது பக்கத் தூணில் ஒரு குரங்கு மண்டியிட்டு மேவாயில் கை வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறது. 

2. எண் கை கொற்றவை
சமபாத ஸ்தானகம், சுருள் முடி மகுடம், எளிய அலங்காரம், மார்க்கச்சை இல்லை, கணுக்கால் வரையான பருத்தி ஆடை.
4 வலது கைகளில் (மே-கீ) கதை, வாள், அக்கமாலை, வைரம்;
4 இடது கைகளில் (மே-கீ) சூலம், ஆழி, மணி, சங்கு
இரு புறமுமும் சாமரம் வீசும் பெண்கள்
வலது கால் பின்னிருந்து எட்டிப் பார்க்கும் சிங்கம்.

3. பூவராகர்
முன் இடது கை முட்டியால் நிலமகளை கடலுக்குள் இருந்து உயர்த்துகிறார். நிலமகள் லலிதாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
பின் இடது கையில் கதை, பின் இடது கையில் ஆழி. நாகராஜன் உடல் மீது இடது காலை மடக்கி வைத்து ஊர்த்துவ ஜானு நிற்கை. வலது கால் நாகராஜன் வால் மீது. அவரது இடப்பக்கத் தூணில் கருடன், வலப்பக்கத் தூணில் பாஞ்சஜன்யம் (வலது கையில் சங்கு).

4. கங்காதரர்
ஜடாபந்தம். பின் இடது கையில் அக்க மாலை. அதன் பக்கத்தில் நாகம். 
பின் வலது கை சடை ஒன்றை நீட்டிப் பிடித்திருக்க முழு உருவ வான் கங்கை தலை கீழாக அதில் விழுகிறாள். கைகளில் ஒரு மணி மாலை. 
அந்த சடையில் இருந்து வேகம் தணிந்து கீழே கசிந்து நிலவுலக கங்கையாக சிவனின் இடதுபுறம் மகரம் மீது நிற்கிறாள்,
சிவனின் வலது முன் கை வரதமாக கீழே நீள அதன் கீழ் கருடாசனத்தில் அமர்ந்து வணங்கும் பகீரதன்.
அவன் பக்கத் தூணில் ஜடாபந்தத்துடன் அர்த்த பத்மாசனத்தில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். இரு கைகளை உயர்த்தி மடக்கி முகம் அருகே வைத்திருக்கிறாள்.
சிவன் நிமிர் குறியுடன் (ஊர்த்துவ ரேதஸை குறிக்கும் ஊர்த்துவ லிங்கம்) இருக்கிறார். இங்குள்ள பெரும்பாலான சிவன் சிற்பங்களில் அவ்வாறே இருக்கிறார்.

5. காலசம்ஹாரர்
பின் கைகளில் சூலம், மழு; முன் கைகளில் அக்க மாலை-நாகம்,  நீர்க்குடுவை.
நெற்றிக் கண், பாதி மூடிய மற்ற கண்கள், நிமிர் குறி.
காலன் தன் பாசம், தடியோடு சிவன் பாதங்களின் கீழே குப்புற விழுந்து கிடக்கிறான்.  இரு புறமும் ஓங்கிய வாட்களுடன் இருவர்.

6. இரண்ய வதம்.
நரசிம்மர் - சிங்க முகம். நான்கு கைகள். சுருள் முடி மூடிய மேற்கைகள். வாள் கேடயத்துடன் கீழே விழுந்துள்ள ஒரு வீரனின் உடல் மீது இடது காலை ஊர்த்துவ ஜானு ஆக வைத்து நின்றுள்ளார். இரணியன் அந்தத் தொடை மீது துவைத்த துணி போல நினைவின்றித் துவண்டு கிடக்கிறான். அவன் சுருண்ட முடிக் கொண்டை கீழே தொங்குகிறது. அவன் இரு கைகளில் வாள் கேடயம். நரசிம்மர் முன்னிரு கைகளால் அவன் வயிற்றைக் கிழிக்கிறார். பின் கைகள் தாடன ஹஸ்தமாய் உயர்ந்துள்ளன. இங்கு இரணியன், வீரன் இருவரின் கேடயங்களும் மடங்கியுள்ளன.

7.சிவன்சதுர தாண்டவம் 

சிவன் சதுர தாண்டவம். 

12 கைகள். மேல் இரண்டு கைகள் ஒரு பாம்பை பிடித்துள்ளன. அதன் தலை இடது கைக்கு உட்புறமாக உள்ளது. இரு கைகள் மடங்கி தலைக்கருகே அமைந்து அபிநயம் பிடிக்கின்றன. இரு கைகள் கழுத்து உயரத்தில் கடக முத்திரை பிடிக்கின்றன. ஒரு இடது கை கஜ ஹஸ்தமாக வீசி இருக்க, ஒரு கை கடி ஹஸ்தமாக வலது இடுப்பில் உள்ளது. மற்ற இரு வலக்கைகளில் மழு, அக்கமாலை. மற்ற இரு இடக்கைகளில் ஒன்றில் நீர் குடுவை, மற்றது இடது பக்கம் ஸ்வஸ்திகாசனத்தில் நிற்கும் உமையின் முகத்தருகே வந்து கொஞ்சுகிறது. சடைக்கட்டு முடியலங்காரம்.நிமிர் குறி சேதமடைந்துள்ளது.

கால் இடையில் இடபம். வலது பக்கம் உடன் நடனமாடும் பிருங்கி முனிவர். 

இடது பக்கம் உமை. உமையின் வலது கை வலது முலையைத் தாங்குவது போலிருக்க இடது கை ஊரு ஹஸ்தமாய் இடது தொடை (ஊரு) மீது.



தெற்கு வாயில்

தெற்கு வாயில் - நரசிம்மர் மற்றும் நடராஜர் சிற்பங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
இதன் மேல் இரு அடுக்கு வஜ்ர மஸ்தகம் என்னும் தோரணம். மேலே மேற்கண்ட சதுர தாண்டவ பன்னிருகை சிவன். கீழே அந்தகாசுர வதமும் கஜ சம்ஹாரமும் இணைந்த சிற்பம். இவ்வாறு கீழே ஒரு ரௌத்திர தெய்வ வடிவத்தையும் மேலே ஒரு அருளும் தெய்வ வடிவத்தையும் அமைப்பது கலிங்க பாணியின் ஒரு கூறு.

தெற்கு வாயிலை அலங்கரிக்கும் மூன்று சாகைகள்
உள் சாகையில் நுட்பமான கொடிக் கருக்கு வேலைப்பாடுகள். மேலே அதன் நடுவில் உள்ள த்வார லலாட பிம்பத்தில் கஜலக்ஷ்மி. நடு சாகையில் கொடிகளைப் பிடித்தவாறு பல நிலைகளில் சாலபஞ்சிகா என்னும் பெண்கள். வெளி சாகையிலும் சிறப்பான அலங்காரங்கள்.

தெற்கு வாயில் வஜ்ர மஸ்தகம்.
 அந்தகாசுர வதமும் கஜசம்ஹாரமும் இணைந்த சிற்பம். இங்கும் சிவன் நிமிர் குறியுடன். வெறித்த கண்கள். மேலிரண்டு கைகள் யானையின் தோலை உரித்துப் பிடித்திருக்க, யானைத் தலை இடது மேற்கைப் பக்கத்தில். இரு கைகள் சூலத்தால் அந்தகாசுரனை குத்தித் தூக்கி உள்ளன. மூன்றாம் இடது கையில் கபாலம். மூன்றாம் வலது கை உடைந்துள்ளது கால்களுக்கு இடையில் இடபம். பின் காலுக்குப் பின்னால்  சூலம் ஏந்திய பூதகணம், சங்கு ஊதும் பூதகணம். முன்காலுக்கு முன்னால்  பிருங்கி, மூன்று பெண்கள். மேலே இருபுறமும் மாலையோடு பறந்து வரும் இரு பெண்கள். தோரணத்தின் ஓரங்களில் மேலே மகரத் தலை கீழே கஜ சிம்மம் (யானையை அடக்கி மேலே இருக்கும் சிம்மம்)

நடுவில் பன்னிருகை சதுர தாண்டவ சிவன். பக்கத்தில் சாமரத்தை இடது தோளில் சாத்தி இருக்கை மேல் அமர்ந்திருக்கும் ஒரு பெண். வட்டத்தின் வெளியில் வலது புறம் முழவு இசைக்கும் ஒரு பூத கணம். பக்கத்தில் நடனமாடும் பிள்ளையார். வட்டத்தின் இடதுபுறம் அமர்ந்திருக்கும் ஒருவர், தாளம் இசைக்கும் ஒருவர். மேலே சிவனுக்கு வலப்புறம் நடனமாடும் பிருங்கி. போற்றி வணங்கும் ஒரு தேவ கணம். இடதுபுறம் மாலையுடன் ஒருவர், ஒரு தேவ கணம்.

தென்மேற்கு மூலை விமான அமைப்பு

தென்மேற்கு மூலை விமான அமைப்பு வடக்குப் பகுதி கருவறையில் புதைந்துள்ளது.

தெற்குப் பக்கம்

சுகாசனத்தில் ஆறு கை துர்க்கை,
பின் இரு கைகளில் தண்டம், வஜ்ரம். நடுக்கைகளில் மணி, நீர்க் குடுவை. முன் கைகள் சிதைந்துள்ளன.

மேற்குப் பக்க முகப்பு தோரணம்
நடராஜர், சிவன் முகம்.

தெற்குப் பக்கம் - கிழக்கு முண்டி

தெற்குப் பக்கம் - நடு முண்டி- பிள்ளையார்

தெற்குப் பக்கம் - மேற்கு முண்டி - அர்த்தநாரி
தலையில் கொண்டை. இடது பக்கம் பெண் மார்பு. பின் இடது கையில் ஆடி. முன் இடது கை இடுப்பில். இடது பக்கம் மட்டும் கீழாடை கணுக்கால் வரை. வலது பின் கையில் அக்கமாலை. முன் கையில் உள்ளது தெளிவாக இல்லை. விறைத்த குறி. வலது பக்கம் சூலத்தை ஏந்தியவாறு நின்றிருக்கும் ஒருவர். இடது பக்கம் பூணூலை பிடித்தவாறு நின்றிருக்கும் ஒருவர். பின்னால் இடபம்.

மேற்குப் பக்கம் - தெற்கு முண்டி

மேற்குப் பக்கம் - நடு முண்டி- சிவன்.
தலையில் சடைக்கட்டு. வலது கையில் அக்கமாலை, பக்கத்தில் நாகம். மற்ற வலது கை உடைந்து உள்ளது. இடது முன் கையில் திரிசூலம், பின் கையில் நீர்க்குடுவை. அவரது வலது பக்கம் தலையைத் தூக்கி நிற்கும் இடபமும் இடது பக்கம் வணங்கி நிற்கும் அரவரசன்.


மற்ற பாகங்கள்










Comments

Popular posts from this blog

முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 1 - இடம், மதில்கள், நுழைவாயில்கள்

முகலிங்கம் முகலிங்கேஸ்வரர் கோயில் 3 : ஜகமோஹனம் - 2: வடக்குப் பகுதி