முகலிங்கம் மதுகேஸ்வர தேவுல ஒரு பஞ்சாயதன அமைப்பு கொண்ட கோயில். "பஞ்ச" என்றால் ஐந்து, "ஆயதனம்" என்றால் சன்னதி. சிவன், திருமால், சூரியன், கணபதி, பார்வதி ஆகிய ஐந்து தெய்வங்களுக்கான ஐந்து விமானங்கள் கொண்ட கோயில் வளாகம் பஞ்சாயதன கோயில். மையத்தில் முதன்மை தெய்வத்திற்கான விமானமும் சுற்றி நான்கு மூலைகளில் தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் மற்ற நான்கு தெய்வங்களுக்கான சிறு விமானங்களும் உள்ள அமைப்பு. முகலிங்கம் மதுகேஸ்வர தேவுலத்தில் சிவன் மையமாக இருக்கிறார்.
தென்கிழக்கு விமானம்
 |
தென்கிழக்கு விமானம் - கிழக்குப் பார்வை 1அ. பாபாக என்னும் அதிட்டானம் மைய முண்டியின் கீழ் ஒடுங்கிய இரு உறுப்புகளையும் பக்க முண்டிகளின் கீழ் மூன்று அகன்ற உறுப்புகளையும் (குர, கும்ப, பட) கொண்டுள்ளது. 1ஆ. ஜாங்க என்னும் சுவர்ப் பகுதியில் மூன்று முண்டிகள் (கோட்டங்கள்) உள்ளன. மைய பெரிய முண்டி பார்ஸ்வதேதை என்னும் அந்த திசைக்குரிய முக்கிய தெய்வ வடிவத்திற்கும் பக்க சிறிய முண்டிகள் ஆவர்ண தேவதை என்னும் மற்ற தெய்வ வடிவங்களுக்கும் உரியவை. இவற்றின் மேற்பகுதி விமானங்கள் போல வடிவமைக்கப்பட்டுள்ளன. மைய முண்டிக்கு மேல் மூன்று ரத கண்டி அமைப்பு உள்ளது, பக்க முண்டிகளின் கீழ் மட்டும் ஐந்து சிறு சிற்பங்கள் உள்ளன. 1இ. ஜாங்கத்திற்கு மேல் கண்டியைப் பிரிக்கும் பரண்ட என்னும் இடையில் பள்ளத்துடன் கூடிய இரு வரிசைகள் உள்ளன. 2. மேற்கண்ட மூன்று அங்கங்களும் அடங்கிய பாட மூன்று ரத அமைப்பாகவும், அதன் மேல் உள்ள கண்டி ஐந்து ரத அமைப்பாகவும் உள்ளன. கண்டியை மூலை ரதமான கனிக பகவில் உள்ள பூமி ஆம்லாக்கள் ஐந்து பூமிகளாகப் பிரிக்கின்றன. ஒவ்வொரு பூமியிலும் பூமி ஆம்லாவிற்குக் கீழ் நான்கு வரிசைகள் உள்ளன. கண்டியின் மேல் பகுதி கந்த என்னும் பலகையால் மூடப்பட்டுள்ளது. 3.கந்தத்தின் மீது மஸ்தகம். கீழிருந்து - பெகி என்னும் கழுத்து, ஆம்லக என்னும் வட்ட ஒரங்களில் சுளைகள் கொண்ட சக்கரம், கவிழ்ந்த கபுரி, கலசம். இங்கு ஆயுதம், த்வஜ (கொடி) இல்லை. அலங்காரங்கள் - ஒவ்வொரு கல் வரிசை மீதும் அலங்கார நாசிகள் செதுக்கப்பட்டுள்ளன அல்லது அவற்றிற்கான இடம் விடப்பட்டுள்ளது. கண்டியின் மைய ரதமான ராஹா பகவின் கீழ்ப் பகுதியில் இரு பூமி உயரமுள்ள வஜ்ர மஸ்தகம் என்னும் இரட்டை அடுக்கு பெரு நாசி ஒன்றிற்கான இடம் விடப்பட்டுள்ளது. பக்க முண்டிகளின் கீழ் 5 சிறு சதுர சிற்பங்கள் உள்ளன. பரண்டவின் பள்ளத்திலும் சிறு சிற்பங்களுக்காக சதுர இடங்கள் விடப்பட்டுள்ளன. இவை முடிக்கப்படவில்லை. மற்ற மூன்று விமானங்களும் இதே அமைப்பைக் கொண்டவைதான், இவை கலிங்கக் கட்டடக் கலையில் ஆரம்ப காலத்தைச் சேர்ந்த விமானங்கள்.
|


மேல் இரு பக்க முண்டிகளிலும் தெய்வங்கள் இல்லை. தெற்கு முண்டியில் ஒரு மனிதன் இரு குழந்தைகளுடன் நிற்கிறான். வடக்கு மண்டியில் ஒரு பெண் வலது கையில் சாமரத்துடன் இடது கையை ஒரு வாளின் மீது வைத்து ஸ்வஸ்திகாசனத்தில் நிற்கும் அழகிய சிற்பம்.
இந்தச் சிற்பங்களில் மனிதர்களுக்கும் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் உள்ளது.
முண்டிகளின் மேற்பகுதி கல் வரிசைகளில் நாசி அலங்காரங்கள் செதுக்கப்பட்டிருக்க மற்றதில் செதுக்க்ப்படாமல் உள்ளது. இரண்டிலும் கீழே 5 சதுர சிறு சிற்பங்கள். தெற்கில் பெண்கள், வடக்கில் பறவைகள்.
 |
| வெறுமையான நடு முண்டி |
 |
தென்கிழக்கு விமானம் - வடமேற்குப் பார்வை. மேற்கில் கருவறையின் வாயில்.
|
 |
மேற்கு வஜ்ரமஸ்தகம் (G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons) |
வடக்குப் பக்க கிழக்கு, மேற்கு முண்டிச் சிற்பங்கள்.
 |
| வெறுமையான நடு முண்டி |
 |
| மேற்குப் பக்கம் |
 |
மேற்குப் பக்கம் - தெற்கு முண்டி
|
 |
வாயில் முகப்பு - துவார லலாட பிம்பத்தில் சூரியன். (G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons) |
 |
வடக்குப் பக்க துவாரபாலகி இடது கைகளில் மலர், நீர்க்குடுவை; பின் வலது கையில் சாமரம், இடது முன் கை கடி ஹஸ்தமாய் இடுப்பில். வாள் பிடி கீழாக வலது பக்கம் நிற்கிறது. நீர்க்குடுவைக்கு கீழே ஒரு குரங்கு. |
 |
தெற்குப் பக்க துவாரபாலகி வலது கைகளில் சாமரம், நீர்க்குடுவை; பின் வலது கையில் பூங்கொத்து, இடது முன் கை வாளின் மீது, நீர்க்குடுவைக்கு கீழே ஒரு குரங்கு. கணுக்கால வரையான பட்டுக் கீழாடை. இரு துவாரபாலகிகளுக்கும் வேறுபட்ட கொண்டைகள். |
தென்மேற்கு விமானம்
 |
| தென்மேற்கு விமானம் |
 |
வாயிலின் மேல் ஈரடுக்கு வஜ்ர மஸ்தகம் மேலே இரு கை நடராஜர். அவரைச் சுற்றி வட்டத்தின் உள்ளே நான்கு, வெளியே நான்கு வித்யாதரர்கள் வணங்கிப் பறந்த நிலையில் உள்ளனர். கீழே லகுலீசர் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவரது லகுடம் இடது தோள் மீது சாய்ந்துள்ளது. கைகள் புத்தருக்கு உரிய தர்மச் சக்கர பிரவர்த்தன முத்திரை ஏந்தியுள்ளன. பக்கத்துக்கு இருவராக அவரது நான்கு சீடர்கள் - கௌருசியர், கர்க்கர், மித்திரர், குசிகர். வட்டத்துக்கு வெளியில் பக்கத்துக்கு இருவர் வணங்கி அமர்ந்திருக்க மேலே பக்கத்துக்கு மூன்று வித்யாதரர்கள். |
 |
வாயிலின் மேல் பகுதி தூண்களின் மேல் உள்ள உத்தரத்தில் சூரியன் முதல் ராகு வரையான எட்டு கோள்கள். கேது இல்லை. இது தொடக்க கால கலிங்கக் கோயில்களின் ஒரு இயல்பு. அதன் கீழ் துவார லலாட பிம்பத்தில் சிவன் பார்வதி. உள்ளே நான்கு சாகைகள் உடைய வாயில் முகப்பு. உத்தரத்திற்கு மேலே உள்ள பரண்டப் பலகையின் முன் பக்கம் நடுவில் ஒரு விமானம், இரு பக்கமும் மாலைகள், மலர்கள் முதலியவற்றுடன் தொழவரும் வித்யாதரர்கள். பரண்ட பள்ளத்தில் சிறு சாளரச் சிற்பங்கள். அவற்றுக்கு இடையே வெவ்வேறு நிலைகளில் மேல் கட்டுமானத்தை தாங்கும் சுமை தாங்கிகள் சிற்பங்கள். |
 |
| வாயில் முகப்பு |
 |
வடக்குப் பார்வை வஜ்ரமுண்டி சிற்பம் தென் கிழக்கு விமானத்தின் வஜ்ர முண்டியில் உள்ளதுதான் G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons
|
 |
வடக்கு ஜாங்கத்தில் கிழக்கு முண்டி. நடு முண்டி வெறுமையாய் உள்ளது. |
 |
இரு கை ஆடவர் இருவர். சுருள் முடி ஜடாபாரத்துடன் முவ்வளைவு நிலையில் நின்றுள்ள மேற்கர் மார்பில் வைத்துள்ள கையில் சுருக்குப் பை போன்ற ஒன்று. அவர் இடது கை அரை கச்சையைப் பிடித்துள்ளது. கிழக்கர் வலது கையில் நீண்ட பிடியுள்ள கரண்டி போன்ற ஒன்றை வைத்திருக்கிறார். கணுக்கால் வரையான ஆடை. ஒரு பெண் மண்டியிட்டு இடது கையை கீழே ஊன்றி வலது கையை தாடையின் கீழ் வைத்து அமர்ந்திருக்கிறார். இந்தச் சிற்பத் தொகுதி எதைக் குறிக்கிறது என்று தெரியவில்லை. |
 |
| வடக்கு ஜாங்கத்தில் மேற்கு முண்டி. |
 |
வடக்கு ஜாங்கத்தில் மேற்கு முண்டி - ஹரிஹரர் இடது பக்கம் திருமாலின் கூறு. பின் கையில் சக்கரம். சங்கு ஏந்திய முன் கையை ஒரு பெண்ணின் தோள் மீது வைத்திருக்கிறார். கை வைத்திருக்கும் பாங்கையும் பெண்ணின் தலை மீது உள்ள கொண்டையையும் பார்க்கும்போது இவள் கௌமோதகீயாக இருக்கலாம். வலது பின் கையில் அக்க மாலை, முன் கையில் பழம் ஒன்று. இவை சிவனின் சிறப்புக் கூறுகள் இல்லை என்றாலும் ஊர்த்துவ லிங்கமும், நெற்றிக் கண்ணும் சிவனை அடையாளம் காட்டுகின்றன. வலது பக்கம் உள்ள உருவத்தின் பாதங்கள் தவிர மற்ற உடல் அடையாளம் காண இயலாத அளவுக்கு சிதைந்து உள்ளது. மகுடம், காதணிகள் இரு பக்கமும் ஒன்றே.
|
 |
| தென்மேற்குப் பார்வை - இந்த இரு பக்கங்களிலும் முண்டிச் சிற்பங்கள் எதுவும் இல்லை. |
வடமேற்கு விமானம்
 |
| கிழக்குப் பார்வை |
 |
| கிழக்கு முகப்பு |
 |
வாயிலின் வடக்குப் பக்கத் தூண் மேலே மயில் மீது கார்த்திகேயர், நடுவில் ஸ்வஸ்திகாசனத்தில் ஒரு பெண், கீழே யானை ஒன்று. |
 |
| வாயிலின் மேல் பக்கம் |
 |
வாயிலின் தெற்குப் பக்கத் தூண் மேலே நடன கணபதி, நடுவில் ஸ்வஸ்திகாசனத்தில் ஒரு பெண், கீழே யானை ஒன்று. |
 |
| கிழக்குப் பக்கம் தெற்கு முண்டி |
 |
கிழக்குப் பக்கம் வடக்கு முண்டி அழகிய காவற்பெண். வலது கையில் சாமரம். இடது கை வாள் மீது. ஸ்வஸ்திகாசனம். |
 |
தெற்குப் பக்கம் (G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons) |
 |
தெற்குப் பக்கம் மேற்கு முண்டி - சிவன் ஜடாபந்தம். திரிபங்க நிலை, நான்கு கைகள். வலது பின் கையில் மழு, சிதைந்த முன் கை; இடது பின் கையில் சூலம், முன் கை வணங்கி நிற்கும் ஒருவர் தலை மீது. பக்கத்திற்கு இருவராக நால்வர் வணங்கி நிற்கின்றனர். சிவனின் வலது பக்கம் மேலே இருப்பவரின் தலை சிதைந்து உள்ளது. |
 |
தெற்குப் பக்கம் - கிழக்கு முண்டி - இரு பெண்கள். ஸ்வஸ்திகாசனத்தில் நிற்கும் தலைவி வலது கையில் உள்ள ஆடியில் முகம் பார்க்கிறாள். இடது கை சேடியின் தோள் மீது உள்ளது. சேடியின் இடது கையில் ஒரு பாத்திரத்தின் பிடியைப் பிடித்திருக்கிறாள். இருவரது குறிப்பாக தலைவியின் கொண்டை அலங்காரம் குறிப்பிடத்தக்கது. தலையில் சந்திரப் பிரபை, சூரியப் பிரபை. முத்து அல்லது மணியாலான அணிகலன்கள் - நெற்றிப்பட்டம், தோள் வளைகள், கை வளைகள், கழுத்தில் இரு மாலைகள், உதரபந்தம், இடையில் மேகலை. தலைவியின் வலது முழங்கையில் இருந்து உத்தரீயம் தொங்குகிறது. |
வடகிழக்கு விமானம்
 |
மேற்குப் பார்வை இந்த விமானம் தெற்கு தவிர மற்ற பக்கங்களில் முண்டிகள் எதிலும் சிற்பங்கள் இன்றியும், வஜ்ர மஸ்தகத்தில் சிற்பங்கள் செதுக்கப்படாமலும், கண்டியில் நாசி அலங்காரங்கள் செய்யப்படாமலும் வாயில் தூண் அலங்காரங்கள் இன்றியும் உள்ளன. வாயிலின் சாகைகள் மட்டும் முழுமையாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. |
 |
வாயில் முகப்பு. (G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons) |
 |
| தெற்குப் பார்வை - இந்த பக்கத்தில் முண்டி, கண்டி ஆகியவற்றில் நாசிகளும் வஜ்ரமுண்டியில் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் முண்டியில் சிற்பங்கள் இல்லை. |
 |
| கிழக்குப் பார்வை |
மற்ற பாகங்கள்
Comments
Post a Comment